மதவாச்சியில் இடம்பெற்ற எரிபொருள் திருட்டு தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மதவாச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பௌசரில் எரிபொருள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கபிதிகொல்லேவ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மதவாச்சி நீதவான் பிரியந்த ஹல்யால உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ள உண்மைகளை கவனத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த பவுசர் காரில் இருந்த 1,510 லீற்றர் டீசல் மிகவும் அதிநவீன முறையில் திருடப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ஏழு இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கபிதிகொல்லேவ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பலரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த டீசல் திருட்டு தொடர்பாக ரயில்வே திணைக்களம் தனியான முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணை அறிக்கையின் பிரகாரம் அனுராதபுரம் புகையிரத நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் இந்த டீசல் திருட்டுக்கு காரணமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.



