ருஹுணு உபவேந்தரின் அடக்குமுறை நடவடிக்கையால் பல்கலைக்கழகமே பாதிக்கப்பட்டுள்ளது: சஜித்

2019 ஆம் ஆண்டு முதல் ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றும் திரு.சுஜீவ அமரசேனவின் அடக்குமுறை வேலைத்திட்டத்தினால் பல்கலைக்கழக சமூகம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (04) பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
இந்த உபவேந்தரின் அடக்குமுறை வேலைத்திட்டம் தொடர்பில் 05 விடயங்களின் கீழ் 86 ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கை கல்வி அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இதன் முன்னேற்றம் எவ்வாறு அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் கல்வி அமைச்சரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்இ ருஹுணு பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக டாக்டர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளருமான ரொஹான் லக்சிறியை கொலை செய்ய முயற்சித்ததாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டிய சுதந்திரமான, அமைதியான, ஜனநாயக வெளிப்பாட்டிற்கான இடத்தை இல்லாதொழித்து அடக்குமுறைக் கலாச்சாரத்தை உருவாக்க துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தொடர்புகொள்வதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். .
அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து உபவேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.



