புருமுனாவுக்கு பாதுகாப்பு அளித்த சட்டத்தரணியிடம் 3 மணி நேரம் விசாரணை

புருமுனாவை தலைமறைவாக இருக்க உதவிய சட்டத்தரணி ஒருவரிடம் மேற்கு தெற்கு குற்றப்பிரிவு நேற்று (02) மூன்று மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளது.
அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த இந்த சட்டத்தரணி புருமுனா என்ற பாதாள உலக குண்டர் ஒருவரை பொலிஸாரிடமிருந்து தப்பிக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வினவிய போது சட்டத்தரணி டுபாயில் உள்ள தனது கட்சிக்காரரின் ஆலோசனையின் பேரில் புருமுனா என்ற பாதாள உலக குழுத் தலைவனை சந்தித்து சட்ட ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதாள உலக குண்டர்களை பொலிஸில் சரணடையுமாறு அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்த குற்றவாளியை அவிசாவளை நீதிமன்றில் ஒப்படைக்க அனுப்பியதாகவும், அதன்போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் புருமுனா டுபாய்க்குத்
தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த புருமுனா பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க உதவிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.



