வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மருத்துவர்கள் இன்று இறுதித் தீர்மானம்

நாளை (01) நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்று (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக இன்று காலை தமது சங்கத்தின் அவசர மத்திய குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, துறைமுகங்கள், எண்ணெய், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் நாளை மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இந்த பணிப்புறக்கணிப்பில் இலங்கை மத்திய வங்கியின் தொழில் நிபுணர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.



