பல்கலைக்கழக மாணவியின் படுகொலை தொடர்பில் நீதிமன்றில் வெளியான தகவல்

கொழும்பு பந்தய மைதானத்தில் கத்திக்குத்து கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணம் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய பல்கலைக்கழக மாணவர் இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை எனவும், அவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய மாணவனை மார்ச் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குருந்துவத்தை பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



