பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் சட்ட ஒப்பந்தம்..

பல்கலைக்கழக மாணவர்களை சமூகத்தில் பொறுப்புள்ள நபராக மாற்றும் வகையில் பல புதிய திருத்தங்களை உள்ளடக்கி 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தை புதுப்பிக்கும் பணியை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் அனைத்து மாணவர்களையும் சட்ட ஒப்பந்தத்திற்கு உட்படுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் துன்புறுத்தல், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சொத்து சேதம் மற்றும் கலவரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் அனைத்து மாணவர்களும் தற்போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்ட உறுதிமொழி உடன்படிக்கையில் கையொப்பமிடத் தயாராகி வருகின்றனர்.
இந்த உறுதிமொழி உடன்படிக்கை சட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், உடன்படிக்கையை மீறுபவர்களுக்கு அது தொடர்பான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு 8 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும், 4 வருட கல்விக்காக அரசாங்கத்தினால் 32 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் காலம் அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை வரையறுக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டங்கள் உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.



