கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார்!

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியில் இருந்து போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாரிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த நபர் நேற்று இரவு மற்றுமொரு நபருடன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு கார்களில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு வந்துள்ளார்.
இந்த நபருக்கு எதிராக அவரது உண்மையான பெயரிலும், அவர் பயன்படுத்தும் போலி பெயரிலும் இரண்டு விமானத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இந்த நபரை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்ததுடன், இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழு குடிவரவு குடியகழ்வு திணைக்கள வளாகத்திற்கு வந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையின் போது, தான் இலங்கை கடற்படையில் இருந்து தப்பியோடியவர் என்றும், இலங்கை முழுவதும் 9 கொலைகளை செய்துள்ளதாகவும், சமீபத்தில் ஹன்வெல்ல பகுதியில் நடந்த கொலையும் அதில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே இவரை விடுவிப்பதற்காக இரண்டு பிக்குகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த பிக்குகள் போலி நபர்கள் என தெரியவந்துள்ளது.
அதன்போது, அறையில் இருந்த நபர் அதிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் இருந்து நேற்று இரவு இந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அப்போது கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



