தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை!

உள்ளுராட்சி தேர்தலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரகடனம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாக செயற்படாவிட்டால் ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் ஜனாதிபதியின் கருத்து நாட்டின் சட்டம் அல்ல எனவும் அனுரகுமார தெரிவித்துள்ளார்
தேர்தல் ஆணைக்குழு, ஜனவரி 5 ஆம் திகதி தேர்தலை அறிவித்தது.
இதன்படி தேர்தல் ஆணைக்குழு, கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து தேர்தல் திகதி ஜனவரி 21 அன்று அறிவிக்கப்பட்டது. அத்துடன்; அஞ்சல் மூல வாக்களிப்புத் திகதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வமானவை என்று தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதி தனது உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே நாடாளுமன்றத்தில் பொய் கூறினார் என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கூறினார்.
அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என அனுரகுமார தெரிவித்தார்.
அத்துடன் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலை ஒத்திவைக்குமாறு கடிதம் கொடுத்தாலும் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவே முடிவு செய்ய முடியும்.
எனவே ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் நகர்வுகளை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மக்கள் முன்வரவேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.



