இன்றைய வேத வசனம் 25.02.2023: நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு

#Bible
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 25.02.2023: நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு

பிரியமானவர்களே! உங்கள் வாழ்வில் ஆண்டவருடைய சமாதானம் நிரம்பி வழியும். ஏனெனில் ஆண்டவர் சொல்லுகிறார்,

‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’. (யோவான் 14:27)

1) எல்லையிலே...
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்’. (சங்.147:14)

பிரியமானவர்களே, உங்கள் குடும்பத்திலும் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் தேவனுடைய சமாதானம் உங்களை நிரப்பும். நம் ஆண்டவர் நம் எல்லை முழுவதும் நம்மை சமாதானத்தால் காத்துக் கொள்ளுவார்.

எப்பொழுது தெரியுமா? ‘எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி, சீயோனே, உன் தேவனைத் துதி’. (சங்.147:12).
நம் தேவனை எப்போதெல்லாம் துதிக்கிறோமோ அப்போதெல்லாம் தேவசமாதானம் நம்மை நிரப்பும். வேதனைகள் நம் இருதயத்தை நிரப்பும் போதெல்லாம் ஒரு சமாதானம் நம் உள்ளத்திற்குள் கடந்து வரும்.
என்னுடைய வாழ்விலும் பலவிதங்களில் போராட்டங்களை சத்துரு கொண்டு வரும்போது ஆண்டவரைத் துதிக்க ஆரம்பிப்பேன். அப்பொழுது என் உள்ளத்திலே, குடும்பத்திலே, எங்கள் ஊழியத்திலே ஒரு தேவசமாதானம் உண்டாகும். என் கவலைகள் மறைந்து போகும்.

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே! கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் எல்லை முழுவதும் தேவ சமாதானம் எல்லையில்லாமல் நிரம்பி வழியும்.

2) இருதயத்திலே...
‘அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’. (பிலிப். 4:7)

மேற்கண்ட வசனத்தின்படி நம் இருதயத்திலும், சிந்தையிலும் தேவ சமாதானம் நிரம்பி வழியும்.
இன்று அநேகரை வெளியில் பார்ப்பதற்கு சிரித்துக் கொண்டு அழகாக இருப்பார்கள்.

ஆனால் உள்ளமும், சிந்தையும் வேதனையோடு, சமாதானமில்லாமல் இருப்பார்கள். காரணம் பலவித குடும்ப போராட்டமும், கவலைகளும் அவர்கள் இருதயத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும். ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் காணப்பட்டால் இன்று முதல் தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும்.

எப்போது தெரியுமா? ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’. (பிலிப். 4:6).

உங்கள் ஒவ்வொரு பிரச்சினைகளை ஆண்டவரிடத்தில் ஜெபத்தின் மூலம் சொல்லுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஜெபியுங்கள். உங்கள் சகல தேவைகளையும் ஜெபத்தின் மூலம் அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது தேவ சமாதானம் உங்கள் இருதயத்திற்குள் நிரம்பி வழியும்.

3) தேசத்திலே...
‘நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்’. (1.தீமோ. 2:2)

நம் தேசத்திலே அமைதியான, கலகமில்லாத ஆளுகை நடந்தால் நம் தேசத்திலே சமாதானம் நிரம்பி வழியுமல்லவா? தேசத்தில் சமாதானமான ஆட்சி நடந்தால், நாமும் நிம்மதியாய் வாழ முடியும்.
எப்போது தெரியுமா?

நம் தேசத்தில் ஆளுகை செய்யும் ராஜாக் களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும். அப்படி நாம் ஜெபிக்கும்போதுதான் நம் தேசத்தில் சமாதானம் உண்டாகும். நம் தேசத்தின் சமாதானம் நம் முழங்கால் ஜெபத்தில் தான் உள்ளது.

எனவே பிரியமானவர்களே! ஒவ்வொரு நாளும் நம் தேசத்திற்காக ஜெபியுங்கள். அதிகாரிகள், ஆளுகை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். அப்பொழுது நாம் அமைதியான, கலகமில்லாத, சமாதானமான வாழ்வு வாழ முடியும்.

அதேபோல் துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லை என்று வேதம் சொல்லுகிறது. (ஏசாயா 48:22). எனவே நாம் தேவனுக்கு பயந்து, அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து தேவ சமாதானத்தை சுதந்தரித்துக் கொள்வோம்

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் நிரம்பி வழியும் சமாதானத்தால் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!! அல்லேலூயா!!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!