10 ஆர்வலர்கள் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்யாமலே நிராகரித்து உச்சநீதிமன்றம்

கடந்த மே மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவுவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தம்மைக் கைது செய்ததன் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பொலிஸார் மீறியுள்ளனர் என்று தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தவறான அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.
இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கடந்த மே மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மனுதாரர்களை பொலிஸார் கைது செய்தமை சட்டவிரோதமானது என மனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
தாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் கூறினாலும், நீதிமன்றத்தின் முன் காட்டப்பட்டுள்ள காணொளிகளில், அவர்கள் வீதிகளை மறித்து, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதையும் காட்டுகின்றன.



