குருநகரிலிருந்து கௌதாரிமுனைக்கான படகுப் பயணம்!
-1-1-1-1-1-1-1.jpg)
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கௌதாரிமுனைக்கு கடல்வழியாக பயணிகள் படகு சேவையை மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக
நேற்றைய தினம் குருநகரிலிருந்து படகு வழியாக ஒரு பயணத்தை மேற்கொண்டேன்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைக் கிராமம் நீண்டகாலமாகவே தரைவழிப் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பிரதேசமாக இருந்து வருகிறது.
யாழ்-மன்னார் ஏ32 வீதியில் பரமங்கிராய் பகுதியிலிருந்து கௌதாரிமுனைக்குச் செல்லும் சுமார் 14 கிலோமீற்றர் நீளமான வீதி மிக மோசமான நிலையில் நீண்ட காலமாகக் காணப்படுவதால், இந்தப் பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள விநாசியோடை மகா வித்தியாலயத்தில் பணியாற்றுவதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சென்று வரும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இதனால் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
2020ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்ட காலம் முதல், அவருடைய மேலதிக இணைப்பாளர் என்ற வகையில் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக முன்னுரிமை அடிப்படையில் இந்த வீதித் திருத்தப் பணிகளைச் செய்வதில் பல சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டன.
தற்போது கௌதாரிமுனைப் பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி முயற்சியை ஆரம்பிக்கவுள்ள இந்தியாவின் அதானி குழுமத்துடன் இதுபற்றி பேசி, அவர்களது சமூகப் பொறுப்புணர்வு வேலைத்திட்டம் ஊடாக இந்த வீதியைத் திருத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதாலும், யாழ்-கௌதாரிமுனை கடல்வழிப் பயணம் மிகக் குறைந்தளவு நேரத்தில் மேற்கொள்ளப்படக்கூடியது என்பதாலும், இதனைச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்காகவே இன்றையதினம் குருநகரிலிருந்து படகு மூலம் கௌதாரிமுனைக்கான பயணத்தை மேற்கொண்டேன்.
சுமார் 20 நிமிட படகுப் பயணத்தில் கௌதாரிமுனை மண்ணித்தலை இறங்குதுறைக்கு படகு மூலம் செல்லக்கூடியதாக இருந்தது. படகின் வேகத்தை இன்னும் அதிகரித்தால் அதைவிடவும் நேரத்தைக் குறைக்கவும் முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு தடவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் சிறிது காலம் ஆசிரியர்களுக்கான படகுச் சேவை சிறிது காலம் நடாத்தபட்டபோதும் அந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.
பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து வசதியுடைய படகு ஒன்று ஒழங்குபடுத்தப்பட்டால் கடல் வழியாக இந்தப் பயணத்தைச் சாத்தியப்படுத்த முடியும்.



