உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா? முக்கிய கலந்துரையாடல் இன்று

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
அதாவது மார்ச் 9ஆம் திதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சிங்கள ஊடகமொன்றின் விசேட உரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, மார்ச் 09 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தேர்தல் நடைபெறும் நாளில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று தலைவர் குறிப்பிட்டார்.
தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மே மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி தேர்தல் சட்டரீதியாக நடைபெறுமா என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை, பணம் இருந்தாலும் தேர்தலே கிடையாது என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவே பல தடவைகள் அறிவித்திருந்தது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தேர்தலை நடத்துவது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நாளை செவ்வாய்க்கிழமை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.



