இலங்கைக்காக ஏனைய நாடுகளுடன் சீனா இணைந்து செயற்பட அமெரிக்கா கோரிக்கை!

இலங்கை உட்பட கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளின் கடன் பிரச்சினையை தீர்க்க ஏனைய கடனாளிகளுடன் இணைந்து செயற்படுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற G20 உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடனை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்கு உதவி வழங்குவதாகவும் சீனா கூறியுள்ள போதிலும், இலங்கையில் சில தொகையை குறைக்குமா என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



