கொழும்புக்கு வந்த தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

வரிக் கொள்கையை திரும்பப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நாடு முடங்கும் என தொழில் வல்லுனர்களின் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோட்டை நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் போராட்டத்தை முன்னெடுத்தால், போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதலும், அமைதியின்மையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்திருந்தனர்.



