வரி செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கை நுழைய முடியாது! ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையல்ல மீட்பு நடவடிக்கையே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தச் செயற்பாடு சீர்குலைந்தால், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கை நுழைய முடியாது எனவும், எந்தவொரு வெளிநாட்டு நாட்டுடனும் வர்த்தகம் செய்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று (21) பிற்பகல் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “2023 வரி உச்சி மாநாட்டின்” ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்திற்கு வேறு எந்த நிறுவனமோ, கட்சியோ அல்லது நபரோ முன்மொழிவுகளையோ அல்லது மாற்றீடுகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.



