போலி ஆவணங்கள் தயாரித்து ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட நபர் கைது

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் போன்றவற்றை போலியாக தயாரித்து ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட இளைஞனை குற்றப்புலனாய்வு திணைக்களம் கொத்தடுவ பிரதேசத்தில் கைது செய்துள்ளது. கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்த இருபத்தைந்து வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அடிக்கடி ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பல்வேறு புகைப்படங்களை எடுப்பதாகவும், இது குறித்து அவரிடம் பொலிசார் விசாரித்த போது, போலி ஆவணங்களை காட்டி பொலிசாரையே தவறாக வழிநடத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட விசாரணையில் ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டதாகக் கூறப்படும் அனுமதிப் பத்திரங்கள் போலியானவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவர் பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆளில்லா விமானமும் சிஐடி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.



