இன்றைய வேத வசனம் 19.02.2023:பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்
 
                ஒருமுறை பிறப்பு - இருமுறை மரணம்
இருமுறை பிறப்பு - ஒருமுறை மரணம்"
இந்த வாசகத்தை சாதாரணமாக ஒருமுறை வாசித்தால் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சற்று நிதானமாக கூர்ந்து வாசித்தால் வித்தியாசத்தையும், ஒரு பெரிய உண்மையையும் அறிந்து கொள்ள முடியும்.
ஒருமுறை பிறப்பு, ஒருமுறை இறப்பு, என்பது உலக நியதி மற்றும் இயல்பான ஒன்று. ஆனால் இரண்டாம் முறை பிறப்பு என்பதையும் இரண்டாம் மரணம் என்பதையும் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் பல தெரியாத உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
முதல்பிறப்பு;-
சாதாரணமாக பிறக்கும் இயல்பான சரீர ரீதியான (physical birth) பிறப்பு குழந்தை பருவம். ஆனால் இரண்டாம் முறை பிறப்பு என்பது ஆத்தும் ரீதியான (spiritual birth) பிறப்பு.
உலகத்தில் மனிதன் பிறந்த பிறகு தன் இஷ்டப்படி, விருப்பப்படி, சுய நலமாய், சுகபோகமாய், கட்டுக்கோப்பில்லாமல், மனம்போன போக்கில் வாழ்கிறான். அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அதைத் திருத்தாமல் துணிகரமாய் செய்கிறான். அவனை படைத்த தேவனுக்கும் அவனுக்கும் தொடர்பில்லாமல் வாழ்கிறான்.
பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், தான் வாழும் முறையில் சந்தோஷமின்றி, சஞ்சலம் நிறையும்போது தேவனை தேடி கண்டடைந்து பின்னர் ஒரு புதிய உறவை தேவனோடு தொடர ஆரம்பிப்பதுதான்.
இரண்டாம் பிறப்பு;-
இதில் அவன் புதிய சிருஷ்டியாய் மாறுகிறான் என்று சொல்லலாம். அவன் வாழ்வில் ஒரு புதிய துவக்கம், பழைய பாவ பழக்கம் மறைந்து, தன் தேவனோடு ஒரு புதிய பரிசுத்த பயணம் தொடர்கிறது.
முதல் முறை மரணம்:- என்பது மனிதன் தன் வாழ்க்கை இயல்பாக சரீரபிரகாரமாக வயதுசென்று, வியாதிப்பட்டு, விபத்தில் மரிப்பது ஆகும்.
மரணம் என்பது ஒரே ஒருமுறைதான் என்ற எண்ணம் மனிதன் இதயத்தில் ஆழமான இருக்கும்போது, இரண்டாம் மரணம் என்று கேள்விப்படும் போது திடுக்கிட வைக்கிறது. கேட்பதற்கு சற்று வினோதமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
யாரெல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் மனம்திரும்பி, தங்கள் பாவவாழ்க்கையை விட்டு, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு ஒரு புதிய சிருஷ்டியாகி பரிசுத்தமாய் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை. அவர்கள் இயேசுவோடு நித்திய காலமாய் வாழ்வார்கள்.
இரண்டாம் மரணம்;- ஆனால் தங்கள் பாவங்களில் மூழ்கி பாவத்துக்கு அடிமையாகி, ஒரு அடிமைத்தன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இயேசுவை மறுதலித்து மனம்போன போக்கில் வாழ்பவர்களுக்கு இரண்டாம் மரணம் (ஆவிக்குரிய மரணம்) அதுவும் முடிவில்லா (காலவரம்பற்ற மரணம் உண்டு ( #வெளிப்படுத்தல் 21 : 8 ).
இந்த அக்கினி கடலாகிய இரண்டாம் மரணத்தில் ஒருவரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே, இயேசு இன்றும் அநேகருடைய இதய கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். மனம் திரும்பி இயேசுவே என்று அவரிடம் வரும் அத்தனை பேருக்கும் இரட்சிப்பு அளித்து புதிய சிருஷ்டியாய் மாற்றி, அவர்களுக்கு வெற்றியான பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்கிறார்.
நீங்க எப்படி Bro! “நாங்க வேற மாதிரி Bro" என்று பாட்டு பாடிவிட்டு அப்படியே அடிமைத்தன வாழ்க்கை வாழப்போகிறீர்களா, இல்லை இயேசுவை விசுவாசித்து மனம் திரும்பி, ஒரு புதிய சிருஷ்டியை போல வாழ்ந்து ஜொலிக்க போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்.
#வெளிப்படுத்தல் 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            