நீதவானின் காரைத் திருடிய நபர் விடுத்துள்ள நிபந்தனை : பொலிஸார் தீவிர விசாரணை

குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதவானுக்கு சொந்தமான ஆறு மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர் நீதவானிடம் நிபந்தனை விதித்துள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு கார் மற்றும் காரில் உள்ள ஆவணங்களை ஒப்படைக்க வேண்டுமானால் 500,000 ரூபாவை தரவேண்டும் என்று குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதவான் அமில ஸ்ரீசம்பத்தின் உத்தியோகபூர்வ கார் பிலியந்தல- மடபாத பகுதியில் இருந்து திருடப்பட்ட நிலையில், நீதவானும் இரண்டு மாடி வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில், தனது காரைத் திருடிய நபரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக நீதவான் பொலிஸாருக்கு அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அவர் காரை திருப்பித் தர 500,000 ரூபாவைக் கோரியுள்ளார்.
சந்தேகநபர் விடுத்த கோரிக்கைக்கு நீதவான் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிவானை அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பெண் ஒருவரின் பெயரில் பெறப்பட்ட சிம் அட்டையில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த பெண் 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



