குடிவரவு குடியகல்வு திணைக்களம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

கணினி தரவு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள குடிவரவுத் திணைக்கள அலுவலகங்களினால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது இன்று பிற்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டது.
அந்த அமைப்பை மீளமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை கடவுச்சீட்டு பெறுவதற்கு நேரத்தை ஒதுக்கியவர்கள் நாளைய தினம் சேவையை பெற்றுக்கொள்ள தமது திணைக்களத்திற்கு வரவேண்டாம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
நாளைய தினம் வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்பட்ட மறுநாளில் தமது அலுவலகங்களுக்கு வருமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நியமனங்களை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் சனிக்கிழமை சேவையை பெற்றுக்கொள்ள வருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்காக சனிக்கிழமைகளில் குடிவரவுத் திணைக்களம் திறந்திருக்கும்.
இன்று விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் குடிவரவுத் திணைக்களத்தின் விநியோக கவுண்டர் மூலம் நாளை நண்பகல் 12 மணிக்குப் பிறகு கடவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
நாளை நண்பகல் 12 மணிக்கு மேல் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்திற்கு வர முடியாதவர்களுக்கு உரிய கடவுச்சீட்டுகள் உடனடியாக கூரியர் சேவை மூலம் அவர்களது வீடுகளுக்கு வழங்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



