ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, உயர் பருவத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வெளியிடவும், 20 இலட்சம் ஏழை குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 10 கிலோ அரிசி வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், பொதுச் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியக் கருணைத் தொகையை பகுதிகளாக வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு, உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள், முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளர்கள், நிதியுதவி மற்றும் செழிப்பு மானியத்தை பற்றாக்குறையின்றி தொடர்ந்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதுடன், தேவையான நிதியை சுகாதார அமைச்சுக்கு வழங்கவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.



