இலங்கை அரசியலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட தயாராகும் பசில் ராஜபக்ஷ !

இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்குமானால், அமெரிக்கக் குடியுரிமையை கைவிடத் தயார் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு வேறு எந்தச் சட்டத் தடையையும் நீக்கத் தயாராக இருப்பதாக அவர் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அவர் வெற்றி பெற்றாரா அல்லது தோல்வியடைந்தாரா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி ஒருவர் அகற்றப்பட்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டு, பெருமளவிலான அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பின்னணியில், இந்த நேரத்தில் தனக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.
தமது வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரகலையினால் அரசியல்வாதிகளின் பல சொத்துக்கள் பொதுமக்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் பசில் தெரிவித்தார்.
எனினும் அவர்கள் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்க அந்த நிலையை மாற்றியமைத்துள்ளார்.
எரிவாயு வெடிப்புகள், எரிபொருள் வரிசைகள் மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வு காண முடிந்ததாக பசில் கூறினார்.
“தற்போது, அந்த சமூகப் பிரச்சனைகள் எதையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை. அவர் அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்ட ஒரு தனி நபர் என்று நாங்கள் நம்பினோம், அவர் அதை நிரூபித்துள்ளார், ”என்று அவர் கூறினார்.



