உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு வேண்டாம் என மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

நாளை இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் பகலில் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையில் மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதேவேளை, தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உதேனி விக்ரமசிங்க மற்றும் மொஹொன் சமரநாயக்க ஆகியோர் கடந்த 20ஆம் திகதி முறைப்பாடுகளை சமர்ப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



