கிரிக்கட் போட்டியில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட கேரள விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கட் அணி, இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் பலவீனமான எதிரியாக இருந்தமை காரணமாகவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டிக்கான பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கேரள மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக திருவனந்தபுரம் கிரிக்கட் போட்டிக்கான அனுமதிக்கட்டணம் அதிகம் என்றும் இதனால் பார்வையாளர்களின் பிரசன்னம் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டிருந்தது.
எனினும், பணம் இல்லாதவர்கள், இந்த போட்டியை வரவேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் அப்துரஹிமான் பதிலளித்திருந்தார்.
இது அவருக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், குறித்த போட்டியை காண குறைந்தளவான பார்வையாளர்கள் வந்ததை அடுத்து, அமைச்சர் அப்துரஹிமான் மீது மீண்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து கேரள விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய விளக்கத்தை வழங்கியுள்ளார்.
இலங்கை அணி, இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பலவீனமான அணி என்பதாலும், அந்த அணியின் வீரர்கள் அதிகம் மக்கள் மத்தியில் அறியப்படாமை காரணமாகவும் பார்வையாளர்கள் அன்றைய போட்டிக்கு அதிக எண்ணிக்கையில் வரவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக இலங்கை அணி ஒருநாள் போட்டி தரவரிசையில் 8வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த போட்டியில் இலங்கை அணி 317 ஓட்டங்களால் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததையும் கேரள அமைச்சர் அப்துரஹிமான் சுட்டிக்காட்டியுள்ளார்.



