குஜராத்தில் இலங்கையின் தூதரக அலுவலகம்

கடந்த வாரம் குஜராத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காந்திநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று முதல்வர் பூபேந்திர படேலைச் சந்தித்த உயர்ஸ்தானிகர், குஜராத் மாநிலத்திற்கும் இலங்கைக்கும் இடையே பல்வேறு துறைகளிலும் குறிப்பாக சுற்றுலாத் துறையிலும் உள்ள தொடர்புகள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் உள்ள இராமாயண பாதையை குஜராத்தின் சுற்றுலாப் பயணிகளிடையே ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவம் மற்றும் இலங்கை யாத்ரீகர்களிடையே குஜராத் புத்த வழிப்பாதையை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
வசதியான நேரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு மொரகொட முதலமைச்சர் படேலுக்கு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை குஜராத்தின் ஆளுநர் தேவ்வ்ரத் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டவர் என்பதனால், அந்த விவசாய முறையின் தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கு வழங்குவதில் அவரின் ஒத்துழைப்பை மொரகொட கோரினார்.
இதேவேளை குஜராத்தை உள்ளடக்கிய அகமதாபாத்தில் தூதரகத்தை அமைப்பதற்கான இலங்கையின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் மொரகொட விளக்கமளித்ததுடன், ஆளுநர் தேவ்வ்ரத்தை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.



