பல நாள் மீன்பிடி படகில் இருந்த சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலில் இருந்த சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக் கப்பலில் இருந்த சந்தேகநபர்கள் 5 பேரையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்தே இது இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மீன்பிடி படகு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
அங்கு 23 கிலோ 235 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மிரிஸ்ஸ, கம்புருகமுவ மற்றும் பிட்டிகல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களுடன் தொடர்புடைய ஹெரோயினுடன் கடற்படை அதிகாரிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.



