இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி - ஐ நா உதவி செயலாளர் நாயகம் இடையே கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் குறித்து விளக்கமளித்ததாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் நீண்டகால மீட்சி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இந்த கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பிரதிநிதிகள் அங்கீகரிப்பதோடு, பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் உட்பட நாட்டில் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த குழுவினருக்கு விளக்கமளித்தார்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை தூதுக்குழுவினர் வரவேற்றனர். ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச விவகார பணிப்பாளர் தினூக் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.



