பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்

இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரான் அண்மையில் இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்தே அவர் தமிழகம் ராமேசுவரத்துக்குள் நுழைந்ததாக தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு மாநிலம் முழுவதும் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் வெளிநாட்டினரை தங்க வைக்கும் திருச்சியில் சிறப்பு முகாமில் செயல்பட்டு வரும் இலங்கையர்கள் அடங்கிய சர்வதேச போதைப்பொருள் குழுவினரை, இந்திய தேசிய புலனாய்வு முகமை அம்பலப்படுத்தியதன் பின்னணியில் கஞ்சிப்பானைஇம்ரானின் தமிழக பிரவேசம் முக்கியத்துவம் பெறுவதாக தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



