அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற குஜராத் வாலிபர் உயிரிழப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக அகதிகள் ஊடுருவுவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பெரிய சுவரை கட்டினார்.
இந்த சுவர் டிரம்ப் சுவர் என்றே அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தின் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரிஜ் குமார் யாதவ் (32) என்பவர் தனது மனைவி 3 வயது மகனுடன் இந்த டிரம்ப் சுவரை சட்டவிரோதமாக ஏறி கடக்க முயன்றார்.
அப்போது அவர் கீழே விழுந்து இறந்தார். அவரது மனைவி மற்றும் மகன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து குற்றப்புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது.
சட்டவிரோதமாக இவர்களை அழைத்து வந்தது யார் என்று அவர்கள் விசாரித்து வருகிறார்கள். குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறும் போது, மெக்சிகோவின் டிஜுவானாவில் இருந்து அவர்கள் அமெரிக்காவின் சாண்டியாகோவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக கலோலில் உள்ள முகவரை அணுகி உள்ளனர். அவர்களின் உதவியுடன் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள சுவரை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது பிரிஜ் குமார் தனது குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு உலோக தகடுகள் மற்றும் கம்பிகள் கொண்ட கான்கிரீட் சுவரை ஏறியுள்ளார்.
அவருடன் அவரை மனைவியும் ஏறி உள்ளார். இந்த நிலையில் பிரிஜ் குமார் தனது மகனுடன் டிஜுவானா பக்கமும் அவரது மனைவி சாண்டியாகோ பக்கமும் தவறி விழுந்தனர்.
இதில் பிரிஜ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பார்த்தபோது அவரது மனைவியும் மகனும் படுக்காயம் அடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரையும் மருத்துவ மனையில் அனுமதித்தனர். பிரிட்ஜ் குமாரின் மனைவிக்கு கை, கால்கள், இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.




