அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் இன்னும் போதுமானதாக இல்லை: நிதி அமைச்சின் செயலாளர்

இலங்கையின் நிதி நிலைமை இன்னும் மோசமான நிலையில் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட செயலாளர், அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளம் வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் இன்னும் போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.
அரச வருமானம் 145 பில்லியன் ரூபாவாக இருக்கும் நிலையில் அத்தியாவசிய செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரச வருமானம் அதிகரித்தாலும் அரச செலவினத்தை ஒரேயடியாக குறைக்க முடியாது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் கலந்துகொண்டார்.
தற்போது வரியை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



