கலிபோர்னியாவில் பதிவான 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பெர்ண்டேல் அருகே கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகள் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் மின்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவித்து வருகிறார்கள்.
மின் விநியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீட்பு குழுவினர் கூறும்போது, 'சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மின் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் தொகை குறைந்த பகுதி என்பதால் மீட்பு பணியில் பெரிய பிரச்சினை இல்லை' என்றனர்.




