மன்னர் சார்ள்ஸின் உருவத்துடன் வரவுள்ள புதிய நாணயத்தாள்களின் மாதிரித் தோற்றங்கள் இங்கிலாந்து மத்திய வங்கியால் வெளியீடு

பிரித்தானியாவில் புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களில் பொறிக்கப்பட்டுள்ள மறைந்த ராணி எலிசபெத்தின் உருவப்படத்துக்குப் பதிலாக மன்னர் சார்ள்ஸின் உருவத்துடன் வரவுள்ள புதிய நாணயத்தாள்களின் மாதிரித் தோற்றங்கள் இங்கிலாந்து மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 5, 10, 20 மற்றும் 50 பவுண்ஸ் நாணயத்தாள்களில் இருக்கும் ராணி எலிசபெத்தின் உருவத்துக்கு பதிலாக தற்போதைய மன்னரான சார்ள்ஸின் உருவத்தை பொறிப்பதற்குரிய நகர்வுகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், முதற் கட்டமாக 5 பவுண்ஸ் நாணயத்தாளின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.
மன்னரின் உருவம் கொண்ட ஐம்பது பவுண்ஸ் நாணயங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள தபாலகங்கள் ஊடாக புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில் தற்போது நாணயத்தாள்களின் உருவங்கள் மாற்றப்படவுள்ளன.
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த புதிய நாணயத்தாள்கள் புழக்கத்துக்கு வரத்தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 4 பவுணஸ் நாணயத் தாள்களின் முன்பக்கங்களிலும் அவற்றின் பாதுகாப்பு சாளரங்களிலும் உருவப்படம் இடம்பெறும்.
புதிய தாள்கள் புழக்கத்துக்கு வந்த பின்னரும் ராணி எலிசபெத்தின் உருவம் கொண்ட பழைய நாணயத்தாள்கள் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது சுமார் 80 பில்லியன் பவுண்ஸ் மதிப்புள்ள சுமார் 4.5 பில்லியன் நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



