ரஷ்ய படைகளின் கோரத் தாக்குதல்களால் உக்ரைனில் இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்
ரஷ்ய படைகளின் கோரத் தாக்குதல்களால் உக்ரைனில் இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ், நாட்டின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் கிரிவி ரிஹ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் நடந்த நாட்களில் ஏவுகணை மழை பொழிந்தன.
அந்த நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பொது உட்கட்டமைப்புகளை குறிவைத்து சுமார் 70 ஏவுகணைகளை ரஷ்யா வீசியது.
இதில் கிட்டத்தட்ட 60 ஏவுகணைகள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டபோதும் ஏஞ்சிய ஏவுகணைகள் 3 நகரங்களிலும் பல கட்டிடங்களை சின்னாபின்னமாக்கியது.
அந்த வகையில் கிரிவி ரிஹ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது. இதில் மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
இந்த மீட்பு பணிகள் விடிய விடிய தொடர்ந்த நிலையில், நேற்று கட்டிட இடிபாடுகளில் இருந்து 1½ வயதான பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது.
இதனிடையே ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலியானதாகவும், சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடந்து வருவதாக கிரிவி ரிஹ் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



