சர்வதேச சட்டத்தை மீறும் இலங்கை அரசாங்கம் - சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு

90 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் தலைவர்களுக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
90 நாட்களுக்கும் மேலாக பல்கலைக்கழக மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் “மாணவர் தலைவர்கள் மீதான தொடர்ச்சியான இலக்கு, துன்புறுத்தல் என்பன சிவில் சமூகத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள அடிப்படையற்ற பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும், மேலும் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தியாகி ருவன்பத்திரன மேலும் கூறுகையில், “போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவது அளவுக்கு விஞ்சிய செயற்பாடாகும்.
எனினும், விமர்சகர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்து வேறுபாடுகளை இலங்கை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் மௌனிக்க செய்கின்றனர்.
பயங்கரவாத எதிர்ப்புக் குற்றச்சாட்டின் கீழ் போராட்டக்காரர்களை தடுத்து வைப்பது, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை மீறுவதாகும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, அமைதியான கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களையோ அல்லது அதில் பங்கேற்பவர்களையோ குற்றவாளிகளாக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது.
“சர்வதேச மனித உரிமைகள் தரத்தை பூர்த்தி செய்யாத பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை ரத்து செய்ய வேண்டும், மேலும் அதன் பயன்பாட்டை நிறுத்துவதற்கு ஏற்கனவே பூண்டுள்ள உறுதிப்பாட்டை நிலைநாட்ட வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும். விசாரணைக்கு போதுமான அணுகலை உறுதி செய்யும் வகையில், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நியமத்தை பூர்த்தி செய்யாத இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும், அனைத்து எதிர்ப்பாளர்களையும் அவர்கள் விடுவிக்க வேண்டும், ”என்று அவர் மேலும் கோரியுள்ளார்.
அமைதியான ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்பவர்களையோ அல்லது அதில் பங்கேற்பவர்களையோ குற்றவாளியாக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 18 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி அவர்களது காவல் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.
தடுப்புக்காவலில் இருக்கும் போது அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் மோசமடைந்து வருவது குறித்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டனர்.
அமைதியான முறையில் ஒன்றுகூடல், நடமாடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் எனவும் தியாகி ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.



