சமஷ்டியே தீர்வென அறிவித்தால் பேச தயார் – கஜேந்திரகுமார்

Mayoorikka
2 years ago
சமஷ்டியே தீர்வென அறிவித்தால் பேச தயார் – கஜேந்திரகுமார்

சர்வதேசத்தையும் தமிழ்மக்களையும் ஏமாற்றி இலங்கை அரசைப் பிணையெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து போடும் நாடகமே பேச்சுவார்த்தை அழைப்பு என கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குறித்த விடயத்தில் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரே நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்மக்களுக்கான தீர்வு தொடர்பில் ரணில்விக்கிரமசிங்க கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும் எனவும், ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டித் தீர்வை நோக்கி செல்ல தாம் தயார் என ஜனாதிபதியிடம் இருந்து பகிரங்க உத்தரவாதத்தை பெறாமல் இந்தப் பேச்சுக்கு செல்வதில்லையென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மத்தியகுழு கூடி முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15.11.2022 செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் முக்கியமாக தெரிவிக்கையில்,

ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களிடம் இருந்து வாக்கை பெறுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஒற்றையாட்சியை நிராகரித்து ஒரு சமஷ்டித் தீர்வை பெற வேண்டும் எனவும் அது தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் தமிழ்மக்கள் தங்கள் ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். ஒற்றையாட்சிக் கட்டமைப்பு ஆரம்ப புள்ளியாக கூட இருக்க முடியாது என்பது தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும்.

இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் எப்படி நடந்து கொண்டுள்ளார் என்பதனை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.

2001 இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிறார். பின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு போர்நிறுத்த உடன்படிக்கைக்கு சென்று பின் ஒரு சமஷடி தீர்வை கொடுப்பார் என்ற நிலைக்கு பின் புலிகளுக்கு எதிராக ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி இராணுவ ரீதியாக அவர்களை அழிப்பதற்கு அத்திவாரங்களை போட்டார். சமஷ்டியை பரிசீலிக்க தயார் என்று சொல்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை கட்டமைப்பை நிராகரிக்க எந்தவொரு நியாயப்பாடும் கிடையாது.

பின் 2015 இல் ஆட்சிக்கு வந்த போது மிகத் தெளிவாக இப்போது இருக்கும் அரசியலமைப்பை விட இறுக்கமான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தயாரித்து அதில் சட்டத்திலேயே இல்லாத ஒருமித்த நாடு என்கிற போலி வார்த்தைப் பிரயோகத்தையும் பயன்படுத்தினார்.

கோத்தபாயவின் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படட அந்தக் கிழமை என்னையும் செயலாளர் கஜேந்திரனையும் நாடாளுமன்றில் சந்தித்து பேசிய வேளை, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்தை அன்றும் கூறினார். தமிழருடைய இனப்பிரச்சினை தீர்ப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி கைவிடப்பட வேண்டும். சமஷ்டி தீர்வை நோக்கி பயணித்தே ஆக வேண்டும். ஒற்றையாட்சியை விட்டு சமஷ்டியை நோக்கி செல்ல தயாரென்றால் நிச்சயமாக இங்கே தீர்வுக்கான இடம் இருக்கிறது என சொல்லிய போது, நடைமுறைச் சாத்தியமான விடயங்களை தான் நாங்கள் பேச வேண்டும். நீங்கள் சொல்வது அப்படி இல்லை. என்றார்.

இந்த நிலையில் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆகி இலங்கைத்தீவு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ள நேரத்தில் அதிகம் நிதியுதவி தேவைப்படும் நேரத்தில் சர்வதேச தரப்புகள் இங்கே ஒரு அரசியல் ஸ்திரத் தன்மையையும், சிங்களம் இல்லாத ஏனைய இனங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இந்த நாடு மாற்றியமைக்கப்பட வேண்டும். என எதிர்பார்க்கிறார்கள்.
இதன் மூலம் சிறீலங்காவின் பொருளாதாரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்விலேயே தங்கியுள்ளது தெளிவாகின்றது.

ஆகவே தமிழ்க் கட்சிகள் ரணில் அரசோடு பேசுவதாக இருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் போய் உட்காருவதே இன்று சிறீலங்கா அரசுக்கு தேவைப்படும் ஒரு விடயம். அப்படி போவதே சிறீலங்கா அரசை பிணையெடுத்துவிடுகின்ற செயலாகும். இந்நேரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ரணில் அரசோடு சரியான முறையில் பேரம் பேசி சரியான வாக்குறுதிகளை பெற வேண்டும்.

ஏற்கனவே ஒற்றையாட்சியை வலியுறுத்தி சமஷ்டியை முற்று முழுதாக நிராகரித்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதே தரப்போடு பேசுவதாக இருந்தால் ஆகக் குறைந்த பட்சம் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நேர்மையாக இந்த ஒற்றையாட்சிக்குள் இனப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாது என்பதை ஏற்றுக் கொண்டு நாட்டைப் பிரிக்காத ஆனால் சமஷ்டியை முழுதாக அடையக் கூடிய பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என்ற கருத்தை கூறியே ஆக வேண்டும். அதை வலியுறுத்தாமல் தமிழ்த் தரப்பு இந்த பேச்சுவார்த்தை மேசையில் கலந்து கொள்வது இன்றுள்ள பேரம் பேசக் கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவே தமிழ்மக்கள் பார்ப்பார்கள்.

இந்த பின்னணியில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே நிகழ்ச்சி நிரலில் தான் செயற்படுகிறார்கள். சமஷ்டியில் தான் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொல்லி பேச்சுவார்த்தைக்கு போவது தான் கூட்டமைப்பினரின் நோக்கம். பேச்சுவார்த்தை மேசைக்கு போய் தாங்கள் சிங்கள அரசோடு நல்லிணக்கமாக இருக்கிறோம் என்று உலகத்துக்கு ஒரு தோற்றப்பாட்டைக் காட்டி நிதியுதவிகளை பெற்றுக் கொடுப்பது தான் கூட்டமைப்பினரின் நோக்கம். சிங்கள அரசுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அவர்களை பிணை எடுத்துக் கொடுக்கின்ற ஒரு நாடகமாகத் தான் நாம் இதனை பார்க்கிறோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்லுக்கும் செயலுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லாமல் செயற்பட்ட ஒரு தரப்பு. அதனால் தான் எங்கள் மீது தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இன்று தெற்கில் மக்களால் நிராகரிக்கப்படட தரப்போடு வடக்கு கிழக்கிலும் மக்களால் நிராகரிக்கப்படப் போகின்றவர்கள் தான் பேச அவதிப்படுகின்றனர். அவர்களுக்கே தெரியும் அடுத்த தேர்தலுக்கு பிறகு இரண்டு தரப்புமே இருக்கப்போவதில்லை.

இந்த பேச்சுவார்த்தை மேசையில் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் கூட்டமைப்பு போய் உட்காருவது என்பது இந்த இனத்துக்கு செய்யக்கூடிய துரோகமாகும். ஏனென்றால் இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்கப் போவதில்லை.

தமிழ்மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தக்கூடிய எந்தவிதமான உத்தரவாதங்களையும் பெறாமல் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்பது எமது மக்களின் எதிர்காலத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு தான் நிலைமை இருக்கப் போகின்றது என்பதை எமது மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!