மக்களுக்கு அரச காணிகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமே என்னுடைய நோக்கம் - ஆளுநர் ஜீவன் தியாகராஜா

வடமாகாணத்தில் காணி இல்லாத மக்களுக்கு அரச காணிகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமே என்னுடைய நோக்கம் என தெரிவித்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மக்களின் காணிகளை பிடிக்கும் வேலை என்னுடையது அல்ல எனவும் கூறியுள்ளார்.
இன்று ஆளுநர் செயலகம் முன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சிலர் நடத்திய போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடமாகாணத்தில் கணி அற்ற மக்களுக்கு அரச காணி பெற்ற கொடுப்பது மந்த கதியிலே காணப்படுகிறது.
இந்நிலையில் வடமாகாண ஆளுநர் என்ற வகையில் மக்களின் தேவைகளை இனம் கண்டு நிறைவேற்றுவதும் நிர்வாகத்தை உரிய முறையில் மேற்கொள்வதும் எனது பணியாக இருக்கிறது.
அதன் அடிப்படையில் வடமாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இன்னும் அரச காணி இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய காணியைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தினுடைய விருப்பம்.
இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான விவரங்களை பிரதேச செயலாளர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி அது தொடர்பான முடிவுகளை எடுக்கவே அவர்களை அழைத்திருந்தோம்.
வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை உரிய முறையில் அடையாளப்படுத்தாமல் பலர் இருக்கிற நிலையில் அவர்களின் காணிகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை ஆளுநர் செயலகம் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறது.
அதேவேளை பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கம் கையகப்படுத்தும் காணி தொடர்பில் ஆளுநர் இறுதி முடிவெடுப்பதில்லை. அதைத் தெரிந்தும் ஆளுநர் மக்களின் தனியார் காணிகளை பிடித்துக் கொடுக்கிறார் என தமது அரசியல் தேவைகளுக்காக சிலர் மக்கள் மத்தியில் தவறான புரிதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதோடு தமது அரசியல் காரணங்களுக்காக சிலர் போராட்டம் செய்கிறார்கள். அவர்கள் போராட்டம் செய்யட்டும் நான் மக்களுக்கு தேவையானவற்றை செய்வதை அவர்களால் தடுக்க முடியாது எனவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்தார்.



