இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த 18000 தமிழர்கள் குறித்து இலங்கையிடம் கேள்வி எழுப்பிய பிரித்தானிய தமிழர் பேரவை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வெளியிடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரோபாயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தினர் அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் 13ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் சுமார் 18,000 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதுடன் சரணடைந்ததாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் சரணடைந்தவர்களில் ஒருவர் கூட இன்றுவரை உயிருடன் திரும்பவில்லை எனவும் அவர்களின் உண்மையான நிலை இன்று வரை தெரியவில்லை.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனால் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நாட்டின் அதிபர் என்ற வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ரணில் விக்ரமசிங்க முழுமையாக அறிந்திருப்பர் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை




