போராட்டத்தின் நடுவே, அரசு சொத்தை சேதப்படுத்தியதாகவும், அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்ததாகவும் 12 பேர் கைது

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளைத் தாக்குதல், அரச சொத்துக்களை அழித்தல், பிரதி அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 10ஆம் திகதி, கொள்ளுப்பிட்டி பெரஹெர மாவத்தையில் சென்று கொண்டிருந்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரால் தாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்கள் குழுவொன்றை முன்னரே கைதுசெய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (29) கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் பிடபெத்தர மற்றும் கொழும்பில் வசிக்கும் 31, 51 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் புகுந்து தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அரநாயக்க கல்பொக்க பிரதேசத்தில் வசிக்கும் தச்சு தொழிலாளி ஆவார்.
கேகாலை பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் தாரக பாலசூரியவின் வீடு மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 31, 47 மற்றும் 44 வயதுடைய கேகாலை மற்றும் பல்லேகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கடுவெல மத்ய நகரில் போராட்டம் இடம்பெற்ற போது பஸ் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 19, 20, 29 மற்றும் 40 வயதுடைய கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



