சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினம் இன்று: நீதி வேண்டி யாழில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினம் இன்றாகும்.
இந்த தினத்தினை முன்னிட்டு யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பதாகை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும், வவுனியாவில் வவு.குடியிருப்பு பிள்ளையார் கோயில் முன்றலிலும், மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர்ப்பகுதியிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியிலும், திருகோணமலையில் திருமலை மாவட்ட செயலக முன்றலிலும் போராட்டங்கள் முன்னனெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களான கனடா, அமெரிக்கா, ஜேர்மன், லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




