இலங்கையை ஆதரிக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கக்கூடாது – சீனாவிற்கு இந்தியா பதில்

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு தேவைப்படுவது ஆதரவுதான் அன்றி வேறொரு கட்சியின் நிகழ்ச்சி நிரலின்படி செயல்பட அழுத்தம் அல்லது சர்ச்சைக்குரிய சூழ்நிலை அல்ல என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் இந்தியா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் பல டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு இதனை அறிவித்திருந்தது.
அதன்படி, சீன தூதரின் கருத்துகள் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் தனிப்பட்ட பண்பாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறுகிறது.
அத்துடன், இலங்கையின் அண்டை நாடான இந்தியா தொடர்பான சீனத் தூதுவரின் கருத்துக்கள், அவரது நாடு நடந்துகொள்ளும் விதத்திற்கேற்ப அமைவதாகவும், அதில் இருந்து இந்தியா மிகவும் மாறுபட்டது என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாத சிறிய கடன்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி நிரல் தற்போது சிறிய நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.



