305 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 05 மில்லியன் மக்களின் வேலைகள் ஆபத்தில்!

305 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுயாதீன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் பிரசன்ன டி சில்வா, அரசாங்கம் உரிய ஆய்வுகள் இன்றி பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்தியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, தங்கள் தொழில்களை நடத்துவதற்காக ஒதுக்கீட்டு முறையின் கீழ் இடைநிறுத்தப்பட்டுள்ள பொருட்களில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவசர அவசரமாக 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் வேறு சில பிரச்சினைகள் குறித்தும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பொருட்களில் ஓடுகள் மற்றும் மட்பாண்டங்களும் அடங்கும்.
மேலும், கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படும் துளையிடும் கருவிகள், சுத்தியல் போன்ற கருவிகள் மற்றும் நிலத்தை தயார் செய்ய விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை தொடர்புடைய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், வாகனங்கள், கிரானைட் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் பின்னர் நிபந்தனைகளுடன் வழங்கியது.
ஆனால், அத்தகைய இறக்குமதியானது, அங்கீகரிக்கப்பட்ட காண்டோமினியம் திட்டங்கள், கலப்பு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுச் சபையின் கீழ் வராத அரசாங்கத் திட்டங்களுக்குச் செய்யப்படலாம்.
திட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் மூலப்பொருட்களின் அளவுகள் 180 நாள் கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.



