ஹிட்லர் பாணி அரசாங்கத்தை அமைக்க காய் நகர்த்தி வருகிறார் ரணில் விக்ரமசிங்க - இடதுசாரி தலைவர்

சிறிலங்காவின் அதிபர் பதவியை மக்கள் ஆணையின்றி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, ஹிட்லர் பாணி அரசாங்கத்தை அமைக்க காய் நகர்த்தி வருவதாக இடதுசாரி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தொழிலாளர் வர்க்கம் தலைமையிலான இடதுசாரி சக்திகள், விவசாய அமைப்புகள், பெருந்தோட்ட மக்கள் மாத்திரமல்லாது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து பாரிய மக்கள் சக்தி ஊடாக ரணில் - ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டுவதே எங்களின் இன்றைய வேலையாகிவிட்டது.
அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ரணில் நடத்தமாட்டார் மாறாக இராணுவ காவல்துறை அரசாங்கத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மொட்டுவும் ரணிலும் சூழ்ச்சி செய்து இந்தத் தேர்தல்களை ஒத்திவைத்து, இராணுவம் மற்றும் காவல்துறையுடன் இணைந்து அரசாங்கத்தை கொண்டு வர அல்லது இராணுவ காவல்துறை அரசாங்கத்தை உருவாக்க, ரணில் - ராஜபக்ச ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாக உறுதியளித்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வெட்கமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் இந்த நாட்டின் எழுச்சி பெறும் மக்களின் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கலாம். நாங்கள் சொல்கிறோம் ரணில், நினைவில் கொள்ளுங்கள் ரணில், நீங்கள் தவறு.
மக்களின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்” எனவும் ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய மேலும் வலியுறுத்தியுள்ளார்.



