எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடி ஒதுக்கீடு!

தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு, நீதியமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த வருடம் ஜுன் மாதம் தீ விபத்துக்குள்ளாகியிருந்தது.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக 473 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.
இதற்கமைய குறித்த பாதிப்புகளால் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.



