நீதிபதி மிரட்டல் விவகாரம் - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன்ஜாமீன்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த சூழலில் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை போலீசார் துன்புறுத்துவதாகவும், உடநலம் பாதித்த அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதனை கண்டித்து இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேசிய இம்ரான்கான் அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக இஸ்லாமாபாத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர் இம்ரான்கான் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால் இஸ்லாமாபாத்தில் உள்ள இம்ரான்கான் வீட்டின் முன்பு அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க இம்ரான்கான் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.



