மீண்டும் கன மழை: தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் நேற்று (22) அதிகாலை முதல் கடும் மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று (22) திகதி நோர்ட்டன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக நோர்ட்டன்பிரிஜ் நீர்த்தேக்கத்தில் வான் கதவுகள் வழியாக நீர் வான்பாய்ந்து வருகின்றன.
இதனால் காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான மற்றும் மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகின்றன.
இதனால் இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் தாழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான மின்சார சபை பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நிர்மானப்பணிகள், விவசாயம், நடமாடும் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



