இன்றைய வேத வசனம் 22.08.2022: அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்.

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 22.08.2022:  அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள்.

தேவனால் நாம் சிருஷ்டிக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.

ஏன் இந்த உலகில் உருவாக்கப்பட்டேன் என்ற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரிவதில்லை.

சிலர் நான் இந்த உலகில் இருப்பது ஒரு விபத்தல்ல, ஏதோ ஒரு நன்மைான காரியத்தை நிச்சயமாக செய்து முடிப்பேன் எனறெல்லாம் நினைப்பார்கள்.

ஆகிலும் வேதம் கூறுகிறது "நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. (ஏசாயா 44:21) என்று திரும்ப திரும்ப கூறுகிறது.

மேற்கூறிய வசனத்தில் நாம் பார்க்கிறபடி கர்த்தர் நம்மை அவருக்கென்று சிருஷ்டித்தார். ஒரு மனிதனுடைய அல்லது மனுஷியுடய சித்தத்தின் படி இந்த உலகில் யாரும் பிறப்பது இல்லை. பிறக்கவும் முடியாது!

அப்படி என்றால் தவறு செய்கிறவர்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன என்று நீங்கள் கேட்கலாம்? அப்படி பிறக்கும் பிள்ளைகளுக்குக் கூட தேவன் ஒரு நோக்கத்தை வைத்து தான் உலகிற்கு அனுப்புகிறார்.

அவர் நம்மை உருவாக்கா விட்டால் யார் நமமை உருவாக்க முடியும்?

உலகில் எவ்வளவோ குழந்தைகள் வேண்டாதவர்களாக கருதப்பட்டு தூக்கி வீசப்படுகிறார்கள்.

பலர் தங்கள் வாழ்க்கையில் எல்லாராலும் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் கர்த்தர் ஒரே நோக்கத்தை வைத்திருக்கிறார்.

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். (ஏசாயா 43:1)

உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே. (ஏசாயா 44:2)

இந்த வசனங்களில் உன்னை உருவாக்கினவர் நான் என்று மீண்டும் மீண்டுமாய் கர்த்தர் கூறுவதை பார்க்கிறோம்.

இந்த நவீன காலத்தில் எத்தனையோ இளம் தம்பதிகள் குழந்தை இல்லாததினால் செயற்க்கை சிகிச்சைகள் மூலம் கருத்தரித்து குழந்தையை பெற்றெடுக்கிறார்கள்.

அதிலும் சிலருக்கு அந்த நவீன சிகிச்சைகள் மேற்கொண்டாலும் குழந்தைகள் பிறக்காமல் இருக்கின்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் தேவ சித்தம் என்று ஒன்று இல்லாமல் எதுவும் நடக்காது என்று தெரிகின்றது. தேவனுடைய நோக்கம் இல்லாமல் யாரும் தோன்ற முடியாது.

களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும். நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ ? தோலையையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர். எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர். உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது. (யோபு 10:9-12)

இந்த சத்திய வசனங்களில் மிகவும் ஆழமாக தன்னை எப்படி தேவன் உருவாக்கினார் என்று யோபு கூறுவதை பார்க்கிறோம்.

ஒரு மனிதனும் ஒரு ஜீவன் உருவாகின்ற விதத்தை தன் கண்களால் பார்க்க முடியாது.

இந்த காலங்களில் பலவிதமான ஸ்கேன் போன்ற கருவிகள் இருந்தாலும் கூட அவைகளின் செயல்பாடுகளின் மூலக்கூறுகளை கண்டறிய முடியாது‌.

இருப்பினும் பால் போல் வார்த்து தயிர் போல் உறையப் பண்ணிணீர் என்ற வசனமானது முற்றிலும் உண்மை.

ஒரு மனிதன் உருவாகும் பொழுது உருவாக்கத்தின் முதல் ஆரம்பமே கண்ணுக்கு தெரியாத மனித அணுக்கள் ஒன்று சேரும்பொழுது தான் ஏற்ப்படுகின்றது.

இதையே பக்தன் யோபு பால்போல் வார்த்து தயிர்போல் உறையப்பண்ணிணீர் என்று கூறுகிறார்.

ஒரு மனிதனை இவ்வளவு நேர்த்தியாக எலும்புகள், தோல், சதை, உள் வெளி உறுப்புகள் இவை அனைத்தையும் கொடுத்து சரியாக செய்து முடிக்கும் ஆண்டவர் நம்மை தூக்கி எறிவதற்காக அல்லது வீணாக்குவதற்காக உருவாக்குவாரா? என்பதை சிந்திக்க வேண்டும்.

தேவன் நம்மை அருமையாக உருவாக்கியுள்ளார். உலகில் ஒருவரும் எந்த ஸகேன் இயந்திரங்களும் கண்டறியாத நேரத்தில் அவர் நம்மை கண்டார்.

இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. (சங்கீதம் 139:6)

இப்படி நம்மை உருவாக்கின தேவன் தான் உருவாக்கின மக்களின் மத்தியில் நம்மை தெரிந்துகொள்கிறார்.

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள். (1 பேதுரு 2:9)

இந்த தெரிந்து கொள்ளுதல் என்பது அவருடைய அனாதி தீர்மானத்தின் படி அவரை அறிந்து கொண்டு அவருடைய பிள்ளைகளாய் வாழ்கின்றனர்.

ஒருவேளை நீங்கள் சொல்லலாம்? ஆண்டவரால் தெரிந்து கொள்ள படாதவர்கள் எப்படி இரட்சிக்கப்படுவார்கள் என்பதாக.

இந்த தெரிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்கிறவன் இரட்சிக்கப்படுகிறான். அசட்டை செய்கிறவர்களோ அவருடைய ஆசீர்வாதங்களை பெறாமலேயே போய்விடுகின்றனர்.

மேற்கூறிய காரியங்களிலிருந்து நாம் அறிந்து கொள்வதென்ன? நாம் இந்த உலகத்தோடு ஒன்றினைந்து அமிழ்ந்து போகின்ற வாழ்க்கை வாழ நாம் உருவாக்கப்படவில்லை.

அவருக்கென்று வாழ தெரிந்துகொள்ளப்பட்டு உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள். ஆக நாம் அவருடையவர்கள்!

 ஆமென்!