நெருக்கடிக்கு தீர்வுக்கான உதவி பெற விமல் வீரவன்ச ரஷ்ய தூதுவரை சந்திக்கிறார்!

நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவியை பெற்றுக் கொள்வதற்காக ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்களது கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட உள்ள கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை நிறுவுவதற்கான திகதி குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மிக விரைவாக இந்த புதிய கூட்டணியை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை உத்தியோப்பூர்வமாக முன்னெடுக்க விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விசேட பேச்சுவார்த்தைக்காக ரஷ்ய தூதுவரை சந்திக்க தீர்மானித்துள்ளோம்.
தற்போது உள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் தொடர்பான நெருக்கடிக்கு ரஷ்யாவினால் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் அவற்றுக்குள்ள தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
அந்த தடைகள் எமது நாட்டின் பக்கம் இருக்குமாயின் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ரஷ்ய தூதுவரும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.



