இலங்கையின் மின்சார வாகன தொழிற்துறையை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கையின் மின்சார வாகன தொழிற்துறையை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அப் பதிவில் மேலும் குறிப்பிட்டதாவது,
வேகாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹர்ஷ சுபசிங்க போன்ற இலங்கையின் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது, ஏனெனில் அவர்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இலங்கையின் மின்சார வாகனத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் வேகா இன்னோவேஷன்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, வேகா மற்றும் பிற முக்கிய தனியார் துறை நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.



