வவுனியாவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்!

வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரை கடத்தி, கப்பல் கோரிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூவரசங்குளம் – வாரிக்குட்டூர் பகுதியில் பெண்ணொருவர் கடத்தி செல்லப்பட்டு, கப்பம் கோரப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமையவே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை விடுவிப்பதற்கு ஐந்து லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கோரப்பட்ட பணத்தை வழங்கும் வகையில், கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் மகளை பொலிஸார் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார், 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 56 வயதான பெண், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த பெண், அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து சந்தேகநபர்களிடமிருந்து 02 இலட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பலரிடம் அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனவே, இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.



