நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது - தேசிய மக்கள் சக்தி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
நெருக்கடி குறித்து அரசாங்கம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற போதிலும், முக்கிய நபர்களை மக்களுக்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உணவு நெருக்கடி, கடினமான காலங்கள் வரவுள்ளதாக ஆட்சியாளர்கள் எச்சரித்த போதிலும், நெருக்கடிகளுக்குப் பின்னால் உள்ள தனிநபர்கள் பாதுகாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடியானது தானாக ஏற்படவில்லை இதற்கு ஆளும் கட்சியே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
மோசமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் கலாச்சாரம் ஆகியவையே நிலவும் நெருக்கடிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



