குமார வெல்கம மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி கொட்டாவைப் பிரதேசத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது தாக்குதல் சம்பவமொன்று நடைபெற்றிருந்தது.
அதன்போது அவர் பயணித்த காரும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குமார வெல்கம மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் வைத்தியசாலையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் நேர்ந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஏற்கனவே நான்கு பேரைக் கைது செய்து விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் வசம் குமார வெல்கமவின் பாதுகாவலர் அணிந்திருந்த அமைச்சரவை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான சீருடை காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



